சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் ; முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை “Zero Tolerance” முறையில் ஒடுக்க களமிறங்குகிறது.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இதற்கான பிரத்தியேக வாகனங்கள் மற்றும் சைபர் பிரிவு செயல்பாடுகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் பங்கேற்றார். முன்னதாக இதற்கான விரிவான ஏற்பாடுகள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் செய்யப்பட்டு, காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த “சிங்கப்பெண் அதிரடிப்படை” என்பது உள்ளூர் காவல் நிலையங்களின் வழக்கமான கோப்பு நகர்வுகளுக்காகக் காத்திருக்கும் ஒரு சாதாரண ரோந்துப் படை அல்ல. இதற்கென முற்றிலும் ஒரு பிரத்யேக அதிநவீனக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகவும் திறமையான மற்றும் துணிச்சலான பெண் அதிகாரிகளில் ஒருவரான ஐ.ஜி கே. பவானீஸ்வரி தலைமையில் இந்தப் படை முழு வீச்சில் இயங்கவுள்ளது.
தொடக்கக் கட்டமாக, இந்த உயரிய அதிரடிப்படையில் 1 எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 பெண் இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 18 சிறப்புப் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இந்த சிங்கப்பெண் அதிரடிப்படைக்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நிறத்திலான நவீன வாகனங்கள் மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் முதலமைச்சரால் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டன.







