நெல்லையில் காதலை கைவிட மறுத்த அக்காளை வெட்டிக் கொன்ற தம்பி கைது
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராமலெட்சுமி (23). இவர் திருநெல்வேலியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ராமலெட்சுமியின் தம்பி முத்துக் கிருஷ்ணன் (20). இவர் ஒரு தனியார் உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ராமலெட்சுமி வாலிபர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக அவர்களது குடும்பத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளும் குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, தம்பி முத்துக் கிருஷ்ணன் தனது அக்காளின் காதலைக் கடுமையாக எதிர்த்து வந்ததுடன், அவரைக் காதலைக் கைவிடுமாறு அடிக்கடி கண்டித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த ராமலெட்சுமி தனது காதலனுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துப் ஆத்திரமடைந்த தம்பி முத்துக் கிருஷ்ணன், ராமலெட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அக்காள் – தம்பி இடையே ஏற்பட்ட இந்தச் சண்டை முற்றிய நிலையில், முத்துக் கிருஷ்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமலெட்சுமியைச் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர், படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ராமலெட்சுமி பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கொல்லப்பட்ட ராமலெட்சுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, முத்துக் கிருஷ்ணனை கைது செய்தனர்.







