“நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது” -மானாமதுரை பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

சிவங்ககை மாவட்டம் மானாமதுரை தேவர் சிலையில் அருகே மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பிரசாரம் செய்தார்,
தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி; பேசுகையில் கூறியதாவது:-
நம்முடைய முதலமைச்சரும், திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்து, உங்கள் கைகளில் இரண்டாவது முறையாக முறையாக மானாமதுரை தொகுதியில் வெற்றி வேட்பாளராக தமிழரசியை ஒப்படைத்துள்ளார். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு வேட்பாளர்.

அப்படிப்பட்ட நம்முடைய தமிழரசிக்கு, தமிழ்நாடு வியந்து பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு மிகச் சிறப்பான வெற்றியை நீங்கள் உருவாக்கி காட்டுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘என்னுடைய பிரச்சாரத்தை எங்கு தொடங்கப் போகிறாய்?’ என்று முதலமைச்சர் என்னிடம் கேட்டபோது, ‘அதை நான் தமிழர்களின் தாய்மடியில் தொடங்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தேன். கீழடிதான் தமிழர்களின் தாய்மடி.
அந்த கீழடியில் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் சகோதரி தமிழரசி. நம்முடைய கீழடியைப் எடுத்துக் கொண்டால், இந்த உலகத்திற்கே தமிழ்நாட்டின் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு பகுதிதான் கீழடி.
அங்கே நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள், உலகின் மூத்த குடிகளில் ஒன்றாக தமிழ்க்குடி இருப்பதை தெளிவாக அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அமெரிக்காவில் உள்ள ‘பீட்டா அனலிடிக்ஸ்’ நிறுவனத்தின் கார்பன் டேட்டிங் ஆய்வுகளின் மூலம் இந்தத் தரவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை நம்முடைய முதலமைச்சர் தயாரித்து ஒன்றிய அரசாங்கத்திடம் வழங்கி, அதை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோதும், அதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
அதை ஏற்றுக்கொண்டால், தமிழர்களின் பெருமையும் தமிழ் இனத்தின் பெருமையும் உலகத்துக்குத் தெரிய வரும். அதைத் தேர்தலுக்குத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து, இந்தி மொழியை தமிழ்நாட்டு மக்கள்மீது திணித்து வரும் பாஜகவாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழின் பெருமையை உலகம் அறிந்து கொள்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘உங்களுடைய ஆய்வறிக்கையை மாற்றிக் கொடுங்கள்; அப்போதுதான் பாஜக ஏற்றுக்கொள்வோம்’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

எங்களுடைய பெருமையை குறைச்சு சொல்லித் தமிழின் பெருமையை உலகத்துக்குச் சொல்லும் இந்த ஆராய்ச்சியின் உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் இயக்கமே அதிமுக. அந்த அதிமுகவில் இருக்கும் ஒரு தமிழனாக எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லியிருக்க வேண்டும்? ‘இந்த ஆய்வறிக்கையை ஒன்றிய அரசாங்கமும், பாஜகவும், மோடியும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பெருமையுடன் கூறியிருக்க வேண்டும். நம்முடைய முதலமைச்சர் சொன்னது போலவே அவர் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், ‘தமிழ்நாடு அரசு ஆய்வறிக்கையை மாற்றி, ஒன்றிய அரசாங்கம் கூறுவது போலவே மாற்றி எழுதியுள்ளது’ என்று கூறிய அந்த வெட்கக்கேடான கருத்துக்கு சொந்தக்காரர் எடப்பாடி பழனிசாமி. அவர் நினைக்கிறார் இந்தத் தேர்தல்ல பாஜக சொல்றதப்படியெல்லாம் கேட்டுத் தேர்தலை நடத்தினால் ஏதோ பதவிக்கு கொண்டு வந்து உட்கார வச்சிருவாங்கன்னு.
பீகாரின் முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமார் நிலை என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். முதலமைச்சராக இருக்க வேண்டியவரை ராஜ்யசபா உறுப்பினராக மாற்றியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நிலை என்னவாகும் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு பிடித்த நல்ல ஊர் ஏதேனும் இருந்தால், அமித் ஷா அவர்களிடம் தெரிவித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களை அதிகபட்சம் அங்கு ஆளுநர் ஆகத்தான் அனுப்புவார்கள்.
ஏனெனில், பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிலைமை என்ன ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். நான் இதை கவலையுடன் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஒரு எதிர்க்கட்சி வேணும் இல்லையா? நமக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்கட்சி அவசியம் வேண்டும். குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாகவாவது நீங்கள் இருக்க வேண்டும் என்ற அந்த அக்கறையோடு கரிசனத்தோடு சொல்கிறேன். பத்திரமா இருந்துக்கோங்க
. நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நம்மளுடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய வெற்றி, திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய வெற்றி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தச் சட்டமன்றத் தொகுதியில் பாஜக தான் எதிரணியில் நிற்கிறது. இன்னும் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. ஒன்றை நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே தேர்தல் என்பதை தாண்டி ஒரு போர் நடக்க இருக்கிறது. ஆர்ஆர்எஸ்யின் தலைநகராக இருக்கக்கூடிய தலைமைப் பீடமாக இருக்கக்கூடிய நாக்பூருக்குமான கீழடி தமிழர்களுக்குமான போர். இந்தத் தொகுதியில் கீழடிக்கும் நாக்பூருக்குமான போராட்டம் போர் என்ற அந்த ஒரு நிலைதான் இந்தத் தேர்தல் களத்தில் இருக்கிறது.
நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய முதலமைச்சரின் வெற்றி, திராவிட இயக்கத்தின் வெற்றி, நம்முடைய கூட்டணியின் வெற்றி என்பது தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல. நாம் பெறும் அந்த வெற்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆன வெற்றி.
எங்களாலும் இந்தப் பிரிவினை சக்திகளை, மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகளை வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் விதைக்கும் ஒரு வெற்றியாக இந்த வெற்றி இருக்கும் என்ற நம்பிக்கை நாம் அத்தனை பேருக்கும் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சொல்கிறார். ஏதோ அவருடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து நம்ம காப்பி அடிச்சுட்டோம்னு. அவர்களின் தேர்தல் அறிக்கையை மக்கள் படிப்பதே இல்லை. பாஜக ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து, உங்களுக்குத் தரக்கூடிய ஆயிரம் ரூபாய் நிறுத்தப் போறாங்க. கோடை காலத்திற்காக இரண்டு ஆயிரம் ரூபாய் என்று சேர்த்து உங்களுக்கு ஐயாயிரம் ரூபாய்யை திமுக உங்கள் வங்கி கணக்குகளில் தந்தார்கள்.
அதைப் பார்த்தவுடனே எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. இப்படியே போனால் என்ன ஆகும்?’ என்று. அதனால், நம்மை பாத்து காப்பி அடிச்சு பத்தாயிரம் ரூபாய் நான் கொடுக்கிறேன். அந்தப் பத்தாயிரம் ரூபாய் நீங்க ஆட்சிக்கு வரப்போறதுல குடுக்க போறதில்ல. அது மட்டும் இல்ல. நீங்க ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை மறந்தவர் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.
நம்முடைய முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளாக ஒரு கோடி 31 லட்சம் பெண்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ வழங்கப்பட்டுள்ளது. அடுத்த முறை ஆட்சி அமைந்தவுடன், அது இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார். அடுத்த முறை ஆட்சி அமைந்தவுடன், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மானாமதுரையில் நிறைவேற்றித் தந்து இருக்கக்கூடிய திட்டங்கள். அரசு கலைக் கல்லூரி, கண்மாய்கள் சீரமைத்து தரப்பட்டிருக்கிறது. வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 47 கோடி செலவில் இரண்டு அணைக்கட்டுகள் கட்டப்பட்டு கட்டிக்குளம், மிளகனூர் மானாமதுரை கிராமம், கீழப்பசளை மற்றும் பிற கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை நாட்டார் கால்வாய் திட்டத்திற்கு 12 கோடி 30 லட்சம்ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தத் திட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கனிமொழி பேசினார்.







