கோவில்பட்டியில் கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்திய குருத்தோலை பவனி

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை நினைவுகூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று காலை கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்துக்கு தூய பவுலின் ஆலய குருவானவர்களும் கிறிஸ்தவ மக்களும் வந்தனர். இரு சபை அருட்தந்தையர்களும் குருத்தோலைகளை மந்திரித்து வழங்கினர். பின்னர் புனித சூசைய புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார், தூய பவுலின் ஆலய முதன்மை குரு ஆண்ட்ரூஸ் விக்டர் ஞான ஒளி அடிகளார், கவுரவ குரு இம்மானுவேல் அடிகளார் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியவாறு ஓசன்னா கீதம் பாடியபடி பவனியாக புதுரோடு, கடலையூர் ரோடு, மில் தெரு,மெயின் ரோடு வழியாக தூய பவுலின் ஆலயம் வந்து சேர்ந்தனர்.
அங்கு இரு சபை அருட்தந்தையர்களும் அருட் செய்தி வழங்கினர். பின்னர் புனித சூசையப்பர் திருத்தல கிறிஸ்தவ மக்கள், அவர்களது ஆலயம் வந்தனர். அங்கு அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர்.








