தூத்துக்குடி மாவட்ட 6 தொகுதிகளுக்கு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, முதல் நிலை சரிபார்ப்பு செய்யப்பட்ட இயந்திரங்களில் இருந்து தேர்தல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக 7 விழுக்காடு இயந்திரங்கள் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டன. மீதமுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து, வாக்குச்சாவடிகளின் தேவைக்கேற்ப ‘இஎம்எஸ் 2.0’ (EVM Management System) இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
விளாத்திகுளம் தொகுதிக்கு 328 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 328 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 356 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி தொகுதிக்கு 432 வாக்குப்பதிவுக் கருவிகள், 432 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 468 விவிபேட் இயந்திரங்களும்,
திருச்செந்தூர் தொகுதிக்கு முறையே 368 வாக்குப்பதிவுக் கருவிகள், 368 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 399 விவிபேட் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 351 வாக்குப்பதிவுக் கருவிகள், 351 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 380 விவிபேட் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு 378 வாக்குப்பதிவுக் கருவிகள், 378 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 409 விவிபேட் இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கோவில்பட்டி தொகுதிக்கு முறையே 381 வாக்குப்பதிவுக் கருவிகள், 381 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 412 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,238 வாக்குப்பதிவுக் கருவிகள், 2,238 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 2,424 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பாதுகாப்பறையில் இருந்து நாளை (24.03.2026) அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்படும். தொடர்ந்து, ‘இஎம்எஸ் 2.0’ கைபேசி செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்.

பின்னர், விளாத்திகுளம் தொகுதிக்குரிய இயந்திரங்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், தூத்துக்குடி தொகுதி இயந்திரங்கள் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருச்செந்தூர் தொகுதி இயந்திரங்கள் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் வைக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தொகுதி இயந்திரங்கள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஒட்டப்பிடாரம் தொகுதி இயந்திரங்கள் ஒட்டப்பிடாரம் பழைய வட்டாட்சியர் அலுவலகத்திலும், கோவில்பட்டி தொகுதி இயந்திரங்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் அமையவுள்ள பிரத்யேக வைப்பறைகளில் வைக்கப்படும்.
இவை அனைத்தும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்படும். பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி.பிரபு (தூத்துக்குடி), ரா.கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல் முருகன் (ஸ்ரீவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஒட்டப்பிடாரம்), ஹிமான்ஷீ மங்கள் (கோவில்பட்டி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் பி.சரவணபெருமாள், என்.ஜி.ராஜேந்திரன், ஏ.சகாயராஜா (அதிமுக), எல்.அக்னல், ஐ.ரவி, த.சுரேந்திரன் (திமுக), எஸ்.சிவராமன், ஆர்.பிரபு (பாஜக), ஆர்.முத்துமணி (காங்கிரஸ்), ச.ஆறுமுகப்பெருமாள் (மதிமுக), த.வில்சன், ஜா.மைக்கேல் அண்டோ ஜீனியர் (விசிக), பி.துரைராஜ், ஏ.லிவிங்ஸ்டன் (தேமுதிக), எஸ்.கிருஷ்ணன், கே.அலெக்சாண்டர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.







