திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருமாதம் மட்டுமே இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தலைமை கவனம் செலுத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் புதிய வரவாக மநீம, தேமுதிக இடம்பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் திமுக தொகுதி பங்கீடு செய்வதில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்துக்கொண்டது.
கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் இடங்களை கேட்டு வருகின்றன. மநீம வுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக உள்ளது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபத்தனை வைத்துள்ளது. இதனை மநீம நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். அதேவேளை கூட்டணியை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக, தவாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன், “2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோம்.இம்முறை கூடுதல் இடங்கள் கேட்ட நிலையில், ஒரு இடம் வழங்குவதாகத் தெரிவித்தனர்.மக்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்தோம். ஆனால், திமுக அதனை பொருட்படுத்தவில்லை” என்று கூறினார்.







