பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு : சுங்கச்சாவடி மேலாளர் கைது
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
இங்கு ரசீது வழங்குதல், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏராளமான பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சுங்கச்சாவடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
மேலாளர் அவதேஷ் சிங், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச செய்திகளை அனுப்பியும், பல்வேறு வகைகளில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மேலாளர் அவதேஷ் சிங் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-இல் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.







