குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கும் பகுதி சீரமைப்பு பணி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வருவது வழக்கம்.
தற்போது சீசன் முடிவடைந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் மேம்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மெயின் அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரும்போது சுற்றுலா பயணிகளை தண்ணீர் இழுத்து செல்லாதவாறு பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட்டு இருந்தது.
தனித்துவமிக்க இந்த பாதுகாப்பு வளைவானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற் பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆங்காங்கே வளைவு பகுதியில் சில இடங்களில் சிமெண்டு பெயர்ந்து காணப்பட்டதோடு ஆங்காங்கே கம்பிகளும் வெளியில் தெரிந்தது.
இது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிதாக பிரமாண்ட முறையில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குற்றாலம் மெயின் அருவிக்கே சிறப்பு அடையாளமாக விளங்கிய மிகப்பெரிய பாதுகாப்பு வளைவு, ஜே. சி. பி. இயந்திரம் மூலம் தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டது.
மேலும் மெயின் அருவியின் முன் பகுதியில் உள்ள தண்ணீர் தேங்கும் பகுதியில் சற்று மூழ்கி குளிக்கும் வகையில் 8 மீட்டர் அளவில் சற்று அகலப்படுத்தியும், ஆண்கள் குளிக்கும் பகுதியின் கீழ் பகுதியில் இருந்து பெண்கள் குளிக்கும் மேல் பகுதி வரையில் பிரமாண்ட ஆர்ச் அமைக்கப்பட்டு எட்டு அடி உயரத்தில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியை பிரிக்கும் வகையில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியை ஒட்டி பெண்களுக்கான பிரத்யேகமாக உடைமாற்றும் அறை இருந்தது. அதனையும் அகற்றி விட்டு புதிதாக கட்டுகின்றனர்.







