திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா தொடக்கம்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,மாசித் திருவிழா இன்று (பிப்ரவரி 21) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது .
தொடர்ந்து, வெள்ளிப் பல்லக்கில் வைக்கப்பட்ட கொடிப்பட்டம், 9 சந்திகள் வழியாகக் கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.05 மணிக்கு, கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக்கட்டிய கற்பக வீரக்குமார் பட்டர் வேத மந்திரங்கள் முழங்கக் கொடி ஏற்றினார்.

பின்னர் கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, காலை 6.35 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலையில் அப்பர் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 25-ஆம் தேதி ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோவிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.
பிப்ரவரி 27-ஆம் தேதி ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்கு ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடையும் நிகழ்வும் நடைபெறும்.

அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
தொடர்ந்து எட்டாம் நாள் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 10.30 மணிக்கு விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
மார்ச் 1-ஆம் தேதி ஒன்பதாம் நாள் திருவிழா அன்று இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் மார்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் 3-ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம், 4-ஆம் தேதி 12-ஆம் நாளுடன் விழா நிறைவு பெறுகிறது.







