சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்தார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் . சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்தர் ராமமூர்த்தி சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.
இக்கோவிலில் வெக்காளியம்மன் சிலை உடன் மகாவிஷ்ணு வெங்கடாஜலபதி சிலைகளும் பெரிய அளவில் கண்ணை கவரும் விதத்தில் உள்ளன..
வெக்காளியம்மன் கோவில் சிலை 42 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ள நீரூற்று வற்றாத நீரூற்றாக உள்ளது.
சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் சிந்தலக்கரை கிராமத்தில் வேலப்ப நாயக்கர் சிலுக்கு அம்மாள் ஆகியோருக்கு 10 வது குழந்தையாக பிறந்தார். தனது சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது சக மாணவர்களுடன் சேர்ந்து களிமண்ணால் அம்மன் சிலையை உருவாக்கி அதனை வழிபட்டு வந்தார்

பிறகு அந்த களிமண் சிலையை ஒரு ஓலை குடிசையில் வைத்து வழிபட்டு வந்தார்
ஒருநாள் வெக்காளியம்மன் இவரது கனவில் தோன்றி தனக்கு சிந்தலக்கரையில் ஒரு பெரிய சிலை அமைக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்று சித்தர் சுவமிகள் பல்வேறு இடங்களில் நிதி திரட்டி சுமார் 42 அடி உயரத்தில் வெக்காளியம்மன் சிலையை நிறுவினார். காந்த சக்தி சூரிய சக்தி இரண்டும் சேரும் இடத்தில் இந்த சிலை உள்ளது சிறப்பு அம்சமாகும். இந்த சிலையை ஒட்டி சித்தர் பீடமும் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இக்கோவிலில் ஆனி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
உள்ளூர் பக்தர்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி விரதம் இருந்து இருமுடி கட்டி ஊர்வலமாக வந்து சித்தர் பீடத்தில் இந்த இருமுடி கட்டை இறக்கி வைப்பார்கள்.
நிறைய பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வருவார்கள். அன்றைய தினம் ராமமூர்த்தி சுவாமிகள் பூக்குழி இறங்குவார்..
இக்கோயில் வளாகத்தில் ராமமூர்த்தி சுவாமிகள் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார். இந்த நிலையில் இன்று மாலை ( பிப்ரவரி 19)ராமமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்தார்.இந்த தகவல் அறிந்து பக்தர்கள் நேரில் சென்று மூர்த்தி சுவாமிகள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். நாளை வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு நடைபெற்று. கோவில் வாளாகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.







