மியான்மருக்கு கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளான 3 இளைஞர்கள் ; துரை வைகோ எம்.பி.முயற்சியால் மீட்பு

மறுமலர்ச்சி தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்,.பி. வேலிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி, பெரியசாமி நகரை சேர்ந்த .சித்திரை செல்வகுமார் (த/பெ செந்தூர் பாண்டி.). நவீன்குமார்(த/பெ பாலமுருகன்,)விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை மேலத்தெரு மதன்ராஜ் (த/பெ பாலன்,) ஆகிய 3 இளைஞர்களை,11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்ற பெயரில் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் கம்போடியா செல்லாமல் , தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு தீவிரவாதக் குழுக்களால் குற்றச் செயல்களில் வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கவலையடைந்த அவர்களின் பெற்றோர்,1.11.2025 அன்று,என்னை நேரில் சந்தித்து தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றிடுமாறு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.
அன்றைய தினமே இந்த விவகாரம் பொதுமக்களுக்கும், அரசின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காக, அன்றே செய்தியாளர் சந்திப்பு நடத்தி இதுபோன்ற மனிதக் கடத்தல் சம்பவங்களில் இனி யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதையும், அந்த மூவரையும் உடனடியாக மீட்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்.
இதனைத் தொடர்ந்து மியான்மரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த 3 தமிழ் இளைஞர்களின் முழு விபரங்களையும் இணைத்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அவசரக் கடிதத்தை அளித்து, அவர்களின் உயிருக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தை சுட்டிக்காட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
பின்னர் 12.12.2025 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து, நான் ஏற்கனவே 19.11.2025 அன்று அனுப்பிய மின்னஞ்சலை நினைவூட்டி இந்த விவகாரத்தின் அவசர அவசியத்தை உணர்த்தி, 3 தமிழ் இளைஞர்களை மீட்டுத்தர வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினேன்.
இதன் விளைவாக , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், மியான்மரில் உள்ள நமது இந்தியத் தூதரகத்தின் தொடர் முயற்சியாலும், உள்ளூர் மியான்மர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் அந்த மூவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதை 13.12.2025 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் நேருதவிச் செயலர் பிபூதி நாத் பாண்டே எனக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கடிதத்தில், அந்த மூன்று தமிழ் இளைஞர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர் என்றும், விரைவில் இந்தியா அழைத்துவர உள்ள விபரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

இச் செய்தி கிடைத்த உடனே மூன்று இளைஞர்களின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு இந்த நல்ல செய்தியைக் கூறி மகிழ்ந்தேன். தொடர்ந்து,
தாயகம் திரும்பிய அந்த மூன்று தமிழ் இளைஞர்களும், அவர்தம் பெற்றோர், உறவினருடன் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பல மாதங்களாக அச்சத்திலும், வேதனையிலும் இருந்த அந்த மூன்று இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அடைந்த மகிழ்ச்சியை நேரில் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.







