மு.க,ஸ்டாலின் முன்னிலையில் கடம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்; தினகரன் மீது கடும் குற்றச்சாட்டு
பாஜக கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்ததற்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் கடம்பூா் மாணிக்கராஜாவை அக்கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்குவதாக இன்று காலை அறிவித்தார். அதே நேரத்தில் சென்னையில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.பி.அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தனர்.,
அதே போல கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் ரத்தினராஜ், கன்னியாகுமாரி மத்திய மாவட்ட அமமுக செயலாளர் டெலஸ், தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ராமசந்திர மூர்த்தி உளிட்டோரும் அவர்களது ஆதரவாளர்களும் இன்று திமுகவில் இணைந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூா் மாணிக்க ராஜா, கூறியதாவது:-
“தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும் போது, 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அமமுக தலைமை கேட்கவில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி திமுகவில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி உள்ளோம்”

டெல்லியின் அழுத்தம் டிடிவி தினகரனுக்கு இருக்கிறதா? இல்லையா? என்று எங்களுக்கு தெரியாது. பெரிய ஆட்களுக்குத்தான் தெரியும். கூட்டணி தொடர்பாக தினகரனை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், எங்களிடம் எவ்வித தகவலும் கூறாமல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் அமமுகவை இணைத்துள்ளார். அவற்றை எல்லாம் சொன்னால் தான் நாங்கள் கன்வின்ஸ் ஆவோமே.
மீண்டும் அதிமுகவுடன் இணைவது ஆபத்தில் முடியும் என்று பலமுறை முன்பே டிடிவி தினகரனிடம் தெரிவித்தோம். ஆனால், அவர் தன்னிச்சையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். திமுக எங்களின் தாய் கழகம். ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நாங்கள் பின்தொடர உள்ளோம். அமமுகவை அதிமுக கவிழ்ந்துவிடும்
இவ்வாறு மாணிக்கராராஜா தெரிவித்தார்.

. முன்னதாக இன்று காலை அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்க ராஜாவை, கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.







