சென்னை சங்கமம் கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; கனிமொழி எம்.பி. வழங்கினார்



தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார்.

‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், பல்லாவரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழாவை தொடர்ந்து நேற்று (15/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்த நிகழ்ச்சிகளை கனிமொழி எம். பி. பார்வையிட்டார். மேலும், கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கனிமொழி வழங்கி கவுரவித்தார்.



முன்னதாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கனிமொழி எம்.பி. நேரில் கண்டு மகிழ்ந்தார்.
18/01/2026 வரை நான்கு நாட்கள் மாலை 6மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், , ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.







