வாழைக் கன்று நேர்த்தி பற்றி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட சுரைக்காய்ப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சந்தனவேல் வாழை தோட்டத்தில் மாணவர்கள் வாழைக் கன்று நேர்த்தி பற்றிய செயல்விளக்கத்தை கிராம விவசாயிகளுக்கு வழங்கினர்.
இந்த செயல் விளக்கத்தினை கிள்ளிகுளம் வ.உ.சி.வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களான ஹரிபிரகாஷ் , இர்ஷாத் அஹமது , இந்திரஜித் நாராயணன், கண்மணி செல்வம் , கிஷோர் மணிக்குமரன் , லோகேஷ்குமார் , மனோஜ்ராஜ் , மதன்குமார், மற்றும் மிர்துன் ஜெய் சௌகான் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்

செயல்முறை:
வாழைக் கன்றுகளின் அடிப்பகுதியுள்ள வேர்களை நீக்கிடவேண்டும்.வாழைக் கன்றுகளின் மேல் பகுதியுள்ள தண்டுப்பகுதி 20 செ.மீ இருக்குமாறு தேர்ந்தெடுக்கவும். பிரித்தெடுக்கப்பட்ட வாழைக் கன்றுகளை 0.1% கார்பென்டாசிம் (1 கிராம்/லிட்டர் தண்ணீர்) கரைசலில் 15-20 நிமிடங்கள் நனைத்து வைக்க வேண்டும்.
பின் வாழைக்கன்றுகளை 4 பங்கு களிமண் மற்றும் 5 பங்கு தண்ணீர் கொண்ட கரைசலில் நனைக்க வேண்டும்.பின் 40 கிராம் கார்போஃபியூரான் 3G துகள்களை வாழைக்கன்றுகளின் மீது தூவ வேண்டும். குறைந்தது 24 மணி நேரம் நிழலில் உலர்த்திய பின் நடவும்.

பயன்கள்:
நடவு செய்வதற்கு முன் வாழை கன்றுகளை முன்கூட்டியே நேர்த்தி செய்வதால் நோய் தடுப்பு, நூற்புழு கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட தாவர நிறுவுதல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, ஃபுசேரியம் வாடல்( _Fusarium_ wilt), மற்றும் நூற்புழுக்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த உதவும்.
இது இறுதியில் ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட வாழைக்கு வழிவகுக்கிறது.







