கோவில்பட்டியில் மறியல்: இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த 25 பேர் கைது

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவில்பட்டியில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னிலையில்,மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகரக்குழு உறுப்பினர் முனியசாமி, இளைஞர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் ரஞ்சனி கண்ணம்மா உள்ளிட்டோர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திரண்டனர்.
அவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு பிரதான சாலையில் ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அவர்களை இளையரசனேந்தல் சாலை விலக்கு பகுதியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் சோலையப்பன், உதவி செயலாளர் மணி, உதவி தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் ஹரிராம், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன்,கண்ணன், ரூபேந்திர சிங், பாபு, ராஜா,வெங்கடேஷ்,தமிழ்முதல்வன்,பாரத், சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*தமிழ்நாட்டில் காலியாக உள்ள மத்திய அரசின் காலிப்பணிடங்களை தமிழக இளைஞர்களை கொண்டே நிரப்ப வேண்டும்.
*தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்ட இயற்ற வேண்டும்.
*வாரம் மும்முறை இயங்கும் சென்னை – செங்கோட்டை சிலம்பு ரெயிலை வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*இளைஞர் விரோத புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
*ஒப்பந்தம் மற்றும அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும்.
*கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் ரெயில் சுரங்கப்பாதை அணுகு சாலைப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
*அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உடனடியாக செய்து தர வேண்டும்







