ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது : திருச்செந்தூரில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, இன்று (ஜனவரி. 1) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், பல்வேறு ஊா்களிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக காவடி, பால்குடம், அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







