கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி: ஆண், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசு
அமமுக. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் ஜாதி, மத, அரசியல் வேறுபாடு இன்றி, “மாற்றத்திற்கான ஓட்டம், முன்னேற்றத்திற்கான ஓட்டம்” என்ற தலைப்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.

17 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில், புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமண கோவிந்தன் முதலிடம் பிடித்து, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றார்.
2-ஆம் இடம் பிடித்த தேனியை சேர்ந்த நிதிஷ்குமாருக்கு ரூ.50 ஆயிரம், 3-ஆம் இடம் பிடித்த மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ் குமாருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
17 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த எடப்பாடியைச் சேர்ந்த லதாவுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றார்.
2-ஆம் இடம் பிடித்த கீதாஞ்சலிக்கு ரூ.40 ஆயிரம், 3-ஆம் இடம் பிடித்த பிரியதர்ஷினிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

அதுபோல, 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில், லோகநாதன், தமிழ்செல்வன், ராபின் ஆகியோர் முறையே, முதல் 3 இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான போட்டியில், ராஜபாளையத்தைச் சேர்ந்த நிவேதா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவிதா, நாசரேத்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா அன்னல் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த விழாவில், அமமுக., துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா பரிசுகளை வழங்கினார்.

17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் 4 முதல் 10ஆம் இடம் வரை பிடித்த நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் 4 முதல் 10 ஆம் இடம் பிடித்த நபர்களுக்கு தலா ரூ. 1000 வீதம் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அமமுக அமைப்புச் செயலாளர் சிவபெருமாள், வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், நகரச் செயலாளர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் குமார்பாண்டியன், அவைத்தலைவர் அமிர்தராஜ்பாண்டியன், மாநில மகளிர் அணியைச் சேர்ந்த ஜீவிதா நாச்சியார், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொறுப்பாளர் லட்சம், ஒன்றிய செயலாளர்கள் விஜயபாஸ்கர், கணபதி பாண்டியன், மகேந்திரன், ஈஸ்வரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்







