கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராம்லட்சுமி நகர் தென் பகுதியில் சாலை, சீவலப்பேரி குடிநீர், தெரு விளக்கு வசதிகள் கேட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்
கை விடுத்து வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படவில்லை. கடந்த வாரம் வரை தொடர்ந்து பெய்த மழையில் இப்பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், ராம்லட்சுமி நகர் தென் பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், உதவிச் செயலாளர் அலாவுதீன், தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகாக்குழு மணிகண்டன் மற்றும் ராம்லட்சுமி நகர் தென்பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.







