திருச்செந்தூரில் கடல் அரிப்பினால் ஏற்பட்ட பள்ளம்: பக்தர்கள் அவதி
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வழக்கம் போல் நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது,சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்திருந்ததால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது.
நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த மணமக்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர்.

கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் மணக்கோலத்தில் இளம்ஜோடிகள் அதிகளவில் காணப்பட்டனர்.
சமீபகாலமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் ராட்சத அலைகள் கரையில் வேகமாக மோதுவதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலான சுமார் 300 அடி தூரத்துக்கு அரிப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கரையில் இருந்து அரிக்கப்பட்டு சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளமும் உருவாகியுள்ளது.

இதனால் பக்தர்கள் கரையில் இருந்து கடலில் இறங்குவதற்கு சிரமப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் பாதுகாப்புடன் குளிக்குமாறு போலீசார், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் அறிவுறுத்தினா்.







