சட்டசபை தேர்தலில் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் ; டி.ஜெயக்குமார் உறுதி
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது.
மேலும் அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த நிலையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை அண்மையில் நடத்தி முடித்த அ.தி.மு.க. சூட்டோடு, சூட்டாக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகிக்கும் பணியை இன்று தொடங்கியது, ஏராளமானவர்கள் விருப்பமனு வாங்கி சென்றனர்,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளே பெரும் எழுச்சியை பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பார்க்கையில் ஒரு மகத்தான வெற்றியை பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்.
தேர்தலுக்கு இன்னும் 4மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சிகளைப் போலவும் பாஜகவும் அதிக சீட்தான் கேட்கும். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும்.

மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. 25 வருடம் வெற்றியைக் கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள். எனக்கு எப்போதும் ராயபுரம்தான் வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக்கும் மாறவில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன். பிரிந்து சென்றவர்களை இணைப்பதைப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது. தலைமைதான் கூற வேண்டும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்கூறினார்.







