கோவில்பட்டியில் அமமுக சார்பில் 14-ந்தேதி மாரத்தான் போட்டி
அமமுக தலைவர் டிடிவி தினகரன் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி நடக்கிறது. இதுகுறித்து அமமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுக தலைவர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் .14-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாரத்தான் போட்டி நடக்கிறது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாட்டில் இதுவரை மாரத்தான் போட்டிக்கு யாரும் வழங்கிடாத அளவில் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. \
அதாவது ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம் இதுவரை யாரும் வழங்கியது இல்லை. பெண்களுக்கு முதல் பரிசு ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்குகிறோம். இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
போட்டியில் பங்கேற்பதற்காக இதுவரை சுமார் 9 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கு மேலும் பதிவு செய்ய ஏராளமானோர் கேட்டு வருகின்றனர். ஆனால் காவல்துறை கேட்டுக்கொண்டதால் பதிவை 9 ஆயிரம் பேருடன் நிறுத்தி உள்ளோம்.

ஜாதி மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாரத்தான் போட்டி நடத்துவதால் காவல்துறை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. அனைத்து கட்சியினரும் முழு ஆதரவு தருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம்.
தற்போது நடத்தப்படும் போட்டி மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். இதில், அரசியல் கிடையாது. எங்கள் தலைவரின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக நாங்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் கொண்டாடும் வகையில் தான் மாரத்தான் போட்டி நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், துணைச் செயலாளர் குமார் பாண்டியன், அமைப்பு செயலாளர் சிவபெருமாள், அவைத்தலைவர் அமிர்தராஜ் பாண்டியன், நகரச் செயலாளர் செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், நிர்வாகிகள் ஈஸ்வரபாண்டியன், செண்பகராமன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.







