கோவில்பட்டியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு திட்டத்திற்கு மடை மாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தேசிய குழு உறுப்பினர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், ராமகிருஷ்ணன், நகரத் துணைச் செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை, வேறு திட்டத்துக்கு பயன்படுத்தாமல், அவர்களுக்கே பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.







