8 பேரை பலிகொண்ட பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி
தூத்துக்குடி கோவில்பட்டியில் இருந்து, தென்காசி திருமலை கோயில் சென்ற தனியார் பஸ்சும் தென்காசியில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சும் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர்மொதிகொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.
60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் , வேக கட்டுப்பாட்டை பின்பற்றாமல், அதிவேகத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது விபத்துக்கு காரணம் என்று கூறி உள்ளனர். விபத்து ஏற்படுத்திய பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
உயிரிழந்த 8 பேரில், மாற்றுத்திறனாளி இளம் பெண்ணின் தாயும் ஒருவர். இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயினுடைய பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். தற்போது தாய் இறந்த நிலையில் அவருடைய எதிர்காலம் கேள்விக்குள்ளானது.
இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் விரைவில் வழங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.







