கோவில்பட்டியில் டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சைக்கு நடவடிக்கை
கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் , ஆணையாளர் மற்றும் உறுப்பினர்கள்
கோவில்பட்டி நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சீனிவாசன்,பாஜக விஜயகுமார், திமுக ஏஞ்சலா,ராமர், மாரியம்மாள், அதிமுக வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் குறைகளை எடுத்து கூறினார்கள்.
உறுப்பினர்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி பதிலளித்து பேசுகையில்கூறியதாவது:-

வார்டு சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நகராட்சி நிர்வாகத்தால் முடிவெடுக்க முடியாது. ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்தந்த வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு அரசின் அனுமதியும், நிதியும் கிடைக்கப் பெற்றவுடன் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும். வாறுகால் அமைக்கும் பணிகள் விரைந்து துவங்க, நகராட்சி பொறியாளர்கள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகரில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பகுதியில் பேட்ஜ் பணிகள் நடந்தாலும் அந்த வார்டு உறுப்பினருக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு நகராட்சி தலைவர் கருணாநிதி பேசினார்.

சுகாதார அலுவலர் ஹரிகணேசன் கூறியதாவது:-
தெருநாய்கள் பிரச்சினையை பொறுத்தவரை, அவற்றுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும்தான் நகராட்சி நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளது. நகராட்சி கருத்தடை மையத்தில் ஒருசில அடிப்படை வசதிகள் செய்ய வேண்டியிருந்தது. அப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. கால்நடை மருத்துவர் மூலம் விரைவில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல், சாலைகளில் பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் நகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் உறிஞ்சும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக கோவில்பட்டி நகருக்கு சீவலப்பேரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த பிரச்சினை எப்போது சரியாகும் என்பது தெரியாததால் தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்ய முடிவெடுத்துள்ளோம். அனைத்து வார்டு பகுதிக்கும் டிராக்டர்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நகர்நல அலுவலர் உதயகுமார், உதவி பொறியாளர் திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







