கோவில்பட்டி நகராட்சி மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக ஆமினா பீவி பதவியேற்பு
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், கோவில்பட்டி முஹம்மது சாலிஹாபுரத்தைச் சேர்ந்த ஆமினா பீவி, கோவில்பட்டி நகராட்சியில் மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று பதவியேற்பு விழா நடந்தது., நகராட்சி ஆணையர் சுகந்தி, மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினர் ஆமினா பீவிக்கு நியமன ஆணையை வழங்கினார்.
பின்னர் ஆமினா பீவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவியேற்பு விழாவில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







