கோவில்பட்டி அருகே மது பாரில் 2 பேர் வெட்டிக்கொலை; ஆயுள்தண்டனை முடிந்து திரும்பியவர் வெறிச்செயல்
கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமு (வயது 55) .இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து சிறைத்தண்டனை அனுபவித்தார். சில மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வந்தவர் சொந்த ஊரில் விவசாய வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த கோமு தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து போனதற்கு மைத்துனர் முருகன் மற்றும் அவரது உறவினர் மந்திரம் ஆகியோர் தான் காரணம் என்று நினைத்தார்.

இதனால் அவர்கள் மீது கொமுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவில் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் மதுக்கடை பாரில் மது அருந்த கோமு சென்றார். அங்கு ஏற்கனவே முருகன் மற்றும் மந்திரம் ஆகியோர் மது அருந்தி கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் கோமுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
என மனைவி என்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு நீங்கள் தானே காரணம் என்று கூறியதுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்த ஊழியர்கள் திகைத்து போய் நின்றனர். மது அருந்திகொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே சரமாரியாக அரிவாளால் வெட்டுப்பட்ட முருகன், மந்திரம் இருவரும் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

உடனே கோமு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார், அரிவாள் வெட்டு காயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,. அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது முருகன் இறந்து போனது தெரிந்தது.
மந்திரத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருதுவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மந்திரம் இறந்து போனார்.

கொலை செய்யப்பட்ட முருகனுக்கு வெள்ளத்துரட்சி என்ற மனைவியும், மூர்த்தி என்ற மகனும் உள்ளனர் மூர்த்தி கோவையில் காவலராக பணியாற்றி வருகிறார்,
2 பேரை கொலை செய்த கோமு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மதுபாரில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.’







