3வது யூனிட்டிலும் பழுது : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலமாக சுமார் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் இரண்டு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதற்க்கிடையே 4 மற்றும் 5ஆவது யூனிட்டுகள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, 3வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் 3ஆவது அலகிலும் நேற்று ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டுள்ளது.
இதையடுத்து பழுதுநீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.







