கோவில்பட்டியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு மற்றும் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மினி பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.

மினி பஸ்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணம் ரூ.11 . ஆனால் 4 மினி பஸ்களில் பயணிகளிடம் ரூ.13, ரூ.14 என கூடுதலாக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 மினி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அந்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.







