சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த தினம்: கோவில்பட்டியில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி

சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டியில் இளைஞர்களுக்கான ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட நேரு இளையோர் மையம், கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மை பாரத் தன்னார்வலர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் பங்கேற்று, ஒற்றுமை பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் தேசியக் கொடிகளை கையில் ஏந்தி, ஒற்றுமையின் செய்தியை பொதுமக்களுக்கு பரப்பும் விதமாக பேரணியாக சென்றனர். வ.உ.சி. அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி எட்டையபுரம் ரோடு, புது ரோடு முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மை பாரத் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். முடிவில் மை பாரத் தன்னார்வலர் தனலட்சுமி நன்றி கூறினார்.







