கடன் விவகாரம்: போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தவர் வெட்டிக்கொலை- 4 பேர் கைது
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 28), தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பிரதீப்பை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஓடஓட விரட்டிச் சென்று தலையில் சரமாரியாக வெட்டினர்.
அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரதீப்பின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தெரிந்த ஒருவருக்காக மற்றொருவரிடம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அந்த கடனுக்காக இதுவரை ரூ.18 லட்சம் வரை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், கடன் தொகையை திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதீப் ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிப்பதாக காவல் நிலையம் முன்பு பிரதீப், தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அவர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக நடந்ததா? அல்லது அதே பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்ததா? என்ற கோணங்களில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இக்கொலை சம்பவம் தொடர்பாக மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த நாராயணன், ஹரிகிருஷ்ணன், ஜபார், லோகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







