பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி கோவில்பட்டியில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நவதீகிருஷ்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டத் தலைவர் செந்தில்குமரன், தமிழக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் பிரான்சிஸ் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயசித்ரா, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் சாலைப் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், சாலை ஆய்வாளர் சங்கத்தைச் சேர்ந்த முருகேசபாண்டியன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் பூப்பாண்டி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-
*திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
* 23.8.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
* தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்
.

* அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும்.
* மேற்கண்டவை உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.







