கூட்டுறவு வார விழாவில் 186 பேருக்கு ரூ.10.15 கோடி கடனுதவி; அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, 186 பேருக்கு ரூ. 10.15 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சரக துணைப் பதிவாளர் மு. கலையரசி உறுதிமொழி வாசித்தார். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் கோ. காந்திநாதன் திட்டவிளக்கவுரையாற்றினார்.

சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கூட்டுறவுக் கொடியை ஏற்றிவைத்து, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, 186 பயனாளிகளுக்கு ரூ. 10.15 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
மேலும், கட்டுரை, ஓவியம், கதை கூறுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற, 10 – 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்ககள் பெற்ற மாணவர்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சரவணன், இணைப் பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் த.விஜயகுமாரி, சரக துணைப் பதிவாளர் ரா. ராமகிருஷ்ணன், கூட்டுறவு நகர வங்கி செயலாட்சியர்கள் பி. முத்துசெல்வி (தூத்துக்குடி மேலூர்), மு. சீனிவாசன் (திருச்செந்தூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜேஷ் வரவேற்றார். துணைப் பதிவாளர் அ. சுப்புராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அ. சாம்டேனியல் ராஜ் செய்திருந்தார்.







