கோவில்பட்டி: போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டு சிறை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் காளீஸ்வரன்(வயது 27)) என்பவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா குற்றவாளி காளீஸ்வரனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமிர்த ஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







