கயத்தாறு கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை
கோவில்பட்டி அருகே கயத்தாறு போலீஸ் எல்லைக்குட்பட்ட அய்யனார்ஊத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் அண்ணாமலை (43/2019) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான உடையார் (76), கோதண்டராமர்(40) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அய்யனார்ஊத்து பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த் சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரெங்கலட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்ப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.







