கோவில்பட்டியில் பரபரப்பு: மின்வாரிய அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 4வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சபரி ராஜன்.. இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றினர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட அதிகமாக வந்து உள்ளது.
இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த மாதம் மின் கட்டணம் ரூ.8000 வந்துள்ளது., வழக்கமாக ரூ.1000 முதல் 1500 வரை பின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.8000 வந்து இருப்பதாகவும், தனது மகள் வெளியூர் சென்றுள்ள நிலையில்.. மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் அதிக தொகை மின் கட்டணமாக வந்ததால் சபரி ராஜன் அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.8000 மின்கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் சபரி ராஜன் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக செலுத்த வேண்டும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் சபரி ராஜன், மின்வாரிய அலுவலக வளாகத்தில் நின்றபடி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றினார்கள். இதற்கிடையே போலீசார் சம்பவ இடம் வந்து தற்கொலைக்கு முயன்ற சபரி ராஜனை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.ல் மேலும் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது/.







