காட்டுப்பன்றி குட்டியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்: போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
=
கோவில்பட்டி அருகே அழகாபுரியிலிருந்து மெட்டில்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப் பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமான பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தியதாக தெரிகிறது,
அவற்றைக் கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றின் அட்டகாசத்தைப் பதிவு செய்து பார்த்தபோது, அவை அதிகாலை நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுவது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை விவசாயிகள் தங்களது நிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டபோது கூட்டமாக வந்த பன்றிகளை விரட்டிய போது . ஒரு காட்டுப்பன்றிகுட்டி மட்டும் விவசாயிகளிடம் சிக்கியது. அதை சாக்குப்பையில் போட்டு கட்டி கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ. வரதராஜனும் உடன் வந்தார்.
கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டு நிகழ்ச்சியில் ஆட்சியருடன் பங்கேற்பதற்காக சார் ஆட்சியர் சென்றுவிட்டதாகத் தெரியவந்தது. இதனால், அவர்கள் அங்கு சென்றனர்.

அப்போது, டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் விவசாயிகளுக்கு தெரியாமல் அந்தப் பையை எடுத்துச் சென்றதுடன், ஆட்சியரை பள்ளியில் சந்திக்கக் கூடாது எனக் கூறினர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பள்ளிக்கு வெளியே விவசாயிகள் காத்திருந்தனர்.
தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோரும் வந்து ஆட்சியரிடம் முறையிடக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் சந்திக்காமல் சென்றதால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர்கள் சார் ஆட்சியர் ஹிமான்சு மங்களிடம் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தாங்கள் கொண்டுவந்த காட்டுப் பன்றி குட்டியைத் தருமாறு கேட்டபோது, அதை வனத் துறையிடம்தான் ஒப்படைப்போம் என போலீசார் கூறினர். விளாத்திகுளம் பகுதியிலிருந்து வந்த வனத்துறை ஊழியர்கள், அது காட்டுப்பன்றிதானா என்பதை ஆய்வு செய்து கூறுவதாகக் தெரிவித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து வரதராஜன் கூறியதாவது:-
, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின்போது காட்டுப் பன்றிகள் அட்டகாசம் குறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம். அது காட்டுப் பன்றி அல்ல, வளர்ப்புப் பன்றி என மரபணு சோதனையில் தெரியவந்ததாகவும், காட்டுப்பன்றியெனில் ஆதாரத்துடன் கூறுமாறும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
எனவே, தீவிரமாகக் கண்காணித்து உயிரைப் பணயம் வைத்து ஆதாரத்துக்காக காட்டுப் பன்றியைப் பிடித்துவந்தால், ஆட்சியரை சந்திக்கவிடாமல் போலீசார் விரட்டிவிட்டனர். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை. பயிர்க் காப்பீடும் விடுவிக்கப்படவில்லை.
கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துகின்றன. பலமுனைத் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றி, மான், முயல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பாதுகாக்க வேண்டிய ஆட்சியரே விவசாயிகளைக் கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது .
இவ்வாறு அவர் கூறினார்,







