வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து; கோவில்பட்டியை சேர்ந்த 5 பேர் பலி
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி 50 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் இன்று அதிகாலை புறப்பட்டு வந்தது.
530 மணி அளவில் கரூர் வெண்ணெய்மலை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய பஸ், சாலையின் நடுப்புற தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது,
இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ் மோதியதில் டிராக்டர் இழுத்து செல்லப்பட்டு வேன் மீது மோதியதில் டிராக்டருக்கு அடியில் வேன் சிக்கிக்கொண்டது.
வேனில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் அலறி துடித்தனர்.சிறிது நேரத்தில் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கிய வேன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சென்ற வேன் ஆகும். வேனில் 15-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்கள் ஏற்காடு சுற்றுலா சென்றவர்கள்.
இந்த கோர விபத்தில் வேன் டிரைவர், 8 வயது சிறுமி தக்சிகா, ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சைபலனின்றி இறந்து போனார்.
விபத்தில் சிக்கி வேனில் இருந்தவர்கள் மற்றும் ஆம்னி பஸ்ஸில் இருந்தவர்கள் என மொத்தம் 27 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல் இறந்து போனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கோவில்பட்டியில் இருந்து கரூர் விரைந்து சென்றனர்.








