கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை நேரில் சந்தித்து வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது :-
ரெயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்பட உள்ள சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த வந்தே பாரத் ரெயிலுக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.
பரபரப்பான நகரான கோவில்பட்டி கல்வி மற்றும் வர்த்தகத்தின் முக்கிய நகர மையமாக திகழ்கிறது. எனவே, எங்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும்.
ஏற்கெனவே சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு விருதுநகரில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு ரெயில்களில் ஒரு ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







