புனித சலேத் மாதா ஆலய திருவிழா: மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு சப்பரத்தை சுற்றி வந்த பக்தர்கள்
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தின் 139 – ம் ஆண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி மாலை நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று விழா கடந்த 20-ந் தேதி நடைபெற்றது. இதில் புனித சலேத் மாதா திருவுருவம் தாங்கிய கொடியுடன் ஜெபமாலை ஊர்வலம் நடத்தப்பட்டு ஆடம்பர கொடியேற்றம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 21- ஆம் தேதி இரவு திருவிழா நடைபெற்றது. இதன் பின்னர் புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட மின் ரத ஊர்வலம் மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது.
நேற்று 22-ம் தேதி புதன்கிழமை பகல் பெருவிழா நடைபெற்றது. புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் ஏற்றப்பட்ட பெரிய தேர் பவனி நடைபெற்றது.
தேர் பவனியின் இறுதியில் புனித சலேத் மாதா சொரூபம் தங்கிய சப்பரம் புனித சலேத் மாதா திருத்தலம் முன்பாக நிலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏராளமான ஆண்களும் பெண்களும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி முழங்காலிட்டு சப்பரத்தை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழா ஏற்பாடுகளை ஊர்க்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.







