காதல் தம்பதி வெட்டிகொலை: புதுப்பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது
தூத்துக்குடி முருகேசன் நகரில் வசித்து வரும் கோவில்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (வயது 23), அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 3-வது நாளான . நேற்று முன்தினம் (2.11.2023) மாலை 6.30 மணியளவில் முருகேசன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த சிலர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது பற்றி அறிந்ததும் சிப்காட் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மாரிச்செல்வம் (23) அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (21) ஆகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளதும் இதையறிந்த மாரிச்செல்வம் வீட்டார் கார்த்திகாவின் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டுள்ளதற்கு கார்த்திகாவின் தந்தை முதலில் மறுப்பு தெரிவித்துள்ளதும் தெரிய வந்தது.
அதன்பின்னர் கார்த்திகாவின் தந்தை ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பகுதியில் குடியிருந்து வருவதாலும் 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைக்கலாம், கொஞ்சம் பொறுமையாக இரு என்று கார்த்திகாவிடம் கூறியிருந்த நிலையில் கார்த்திகா கடந்த 30.10.2023 அன்று தன் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக மாப்பிள்ளை வீட்டாருடன் கோவில்பட்டிக்குச் சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மேற்படி மாரிசெல்வத்தை திருமணம் செயது கொண்டார்.
நாம் பெரிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த நிலையில் இவ்வாறு ஓடிப்போய் திருமணம் செய்து தங்களை அசிங்கப்படுத்தி விட்டாளே என்று பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட திடீர் ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கொலை செய்த எதிரிகளை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு. சண்முகம், திரு.ராஜபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. யாக்கோபு ஆகியோர் தலைமையிலான போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்..
இதை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் (47), கே.வி.கே நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23) சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் 3) ராஜபாண்டி (27) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







