• May 16, 2024

நூறு ரூபாய் நோட்டு….சிறுகதை

 நூறு ரூபாய் நோட்டு….சிறுகதை

சாம்பசிவம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.பை நிறைய சம்பளம் இல்லாவிட்டாலும் கை நிறைய சம்பளம்.
அலுவலகத்துக்கும் அவரது வீட்டுக்கும் வெகு தூரம்.பஸ்சில் வந்துதான் அலுலகத்துக்கு நடந்து செல்வார்.
திருமணம் ஆகாதவர்.இரண்டு தங்கச்சிகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.அப்பா இறந்து போனபிறகு அனைத்து செலவும் அவர் தலையில் வந்து விழுந்தது.
தங்கச்சிகள் திருமணத்துக்காக பணத்தை சேர்க்கவேண்டியது இருந்ததால் செலவுகளை குறைத்து கொண்டார்.
சிக்கனத்தின் வடிவமாக இருந்தார். அவரை கஞ்சன் என்று அனைவரும் கேலி பேசுவர். பிழைக்க தெரியாதவன் என்று திட்டுவர்.
சம்பளத்தோடு சரி கிம்பளம்… தானாக வந்தாலும் வாங்கமாட்டார். பகவான் கவனிச்சுண்டே இருக்கார் என்று சொல்வார்.
அன்று அலுவலகத்தில் அதிக பணி. மாலை ஐந்து மணியானதும் அலுவலகத்திலிருந்து சோர்வாக பஸ்நிலையத்தை நோக்கி நடந்தார்.
பஸ்சுக்காக பத்து பத்து ரூபாய் சில்லறையாக வைத்திருந்தார். பஸ்நிலையத்துக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக கிடந்தது. அவர் நடந்து செல்லும் போது வழியில் கிடந்த ஒருகல் அவரது கால் பெருவிரலில் இடித்தது. அவர் ஆ..என்று கத்தியவாறு கீழே குனிந்து பெருவிரலை பார்த்த போது தரையில் 100ரூபாய் நோட்டு மடங்கிய நிலையில் கிடந்தது.
சாம்பசிவம்…நடுக்கத்துடன் அந்த நோட்டை பார்த்தார். யாரோ கவனக்குறைவாக போட்டுட்டு போயிருப்பாங்க…போலிருக்கு …அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. என்ன செய்ய..பணத்தை எடுப்பதா அல்லது கண்டும் காணாமல் போய்விடுவதா …மனம் அலை மோதியது.
இறுதியில் பணத்தை எடுப்போம். நூறு ரூபாய்தானே. இதை கொண்டு போய் போலீசிலா கொடுக்க முடியும்.யாரும் தேடிவந்தா கொடுப்போம்..நாம ஒண்ணும் தப்பு பண்ணலையை என்று நினைத்தவாறு அந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து பையில் வைத்தார்.
அவரது உடலில் அவரை அறியாமல் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அங்கிருந்து பதட்டத்துடன் நடந்தார்.அவருக்கு ஏதோ தவறு செய்துவிட்டது போல் ஒரு உணர்வு வாட்டியது.
தடுமாற்றத்துடன் பஸ்நிலையத்தை நெருங்கினார். ஒரு முதியவர் அய்யா சாப்பிட்டு இரண்டு நாளாச்சுதய்யா ..ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா என்று சாம்பசிவத்தை மறித்து கேட்டார்.
அவரது வாடிய முக தோற்றம் சாம்பசிவத்தை உருக்கியது. சட்டைபையிலிருந்து ரூபாயை எடுத்து கொடுத்தார். அதைபார்த்த முதியவர் ஆச்சர்யத்துடன் அந்த நோட்டை பார்த்தார்.அது நூறு ரூபாய்.அவருக்கு சின்ன தடுமாற்றம்.
ஒரு ரூபாய்க்குமேல யாரும் தரமாட்டார்களே…இவர்எப்படி நூறு ரூபாய் கொடுத்தார்.ஒருவேளை தெரியாமல் கொடுத்துவிட்டாரோ..புரியவில்லையே என்று திணறினார்.
பின்னர்…சாம்பசிவத்தை பார்த்து….சாமி….எனக்கு தெரியாம நூறு ரூபாயை கொடுத்திட்டியன்னு நினைக்கிறேன். நீங்கமன திருப்தியா என்ன கொடுக்கியளோ அது போதும் சாமி என்று சொல்லியவாறு நூறு ரூபாயை அவரிடம் நீட்டினார்.
சாம்பசிவத்துக்கு அப்போதுதான் தெரிந்தது. பதட்டத்தில் பத்து ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய் கொடுத்ததை அறிந்து கொண்டார்.அந்த முதியவரிடமிருந்து வாங்கி நூறு ரூபாயை தன் பையில்வைத்தார். பின்னர் பத்து ரூபாய் நோட்டை எடுத்து முதியவரிடம் கொடுத்து சாப்பிடுங்க என்றார்.
முதியவர் அதை வாங்கிக்கொண்டு..சாமி..அடுத்தவங்க காசு நமக்கு வேண்டாம் சாமி.அது நம்மக்கிட்ட நிக்காது.நமக்கு நியாயமா கிடைக்கும் காசுதான் நிக்கும் சாமி..என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
முதியவர் சொன்ன வார்த்தைகள் சாம்பசிவத்தை முள்ளாக குத்தியது. இந்த நூறு ரூபாய் வந்ததிலிருந்து .மனம் ஒரு நிலையில் இல்லை. பத்து ரூபாய் கொடுக்கவேண்டிய முதியவருக்கு நூறு ரூபாய் கொடுக்கிறேன்.
பசியால் துடிக்கும் அவரே நூறு ரூபாய் வேண்டான்னு திருப்பி கொடுத்துட்டு போறாரு.யார் போட்டுட்டு போனாங்களோ இந்த நூறு ரூபாயை தெரியல.அடுத்தவங்க காசு நமக்கு வேண்டாம். ..யாரும் தேடி வந்தாங்கன்னு கொடுத்துட்டு நிம்மதியா பஸ் ஏறி ஊருக்கு போகவேண்டியதுதான் என்று நினைத்தார்.அந்தவழியாக பணத்தை காணவில்லை என்று யாரும் வருகிறார்களா என்று காத்திருந்தார். யாரும் வரவில்லை. பஸ்சுக்கு நேரமாகியது.
இந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல மனம் இல்லை.
பஸ் நிலைய பிள்ளையார் கோவில் அவருக்கு நினைவு வந்தது .நேராக அங்கு சென்றார் .சுற்றிவந்தார். தலையில் இரண்டு குட்டு போட்டார். பிள்ளையாரை வணங்கினார்.
அங்குள்ள உண்டியலில் நூறு ரூபாயை போட்டுவிட்டு விறு விறு என்று பஸ்நிலையத்துக்குள் வந்தார் .பஸ் தயாராக நின்றது.ஏறி அமர்ந்தார். பஸ் புறப்பட்டது. இப்போதுதான் அவரது மனதில் ஒரு அமைதி காற்று வீசியது.
வே.தபசுக்குமார்.தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *