• March 6, 2026

28 தொகுதிகள் ஒதுக்கீடு: வேட்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் அதிரடி

 28 தொகுதிகள் ஒதுக்கீடு: வேட்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் அதிரடி

காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யமூர்த்தி பவன்,

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. 2006 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களிலும், 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இப்படி தொடர்ந்து 20 ஆண்டுகள் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறையும் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. ஒரு வழியாக, 3 மாத போராட்டத்திற்கு பிறகு, தொடர்ந்து 5-வது முறையாக திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகள் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர்( தனி), சோளிங்கர், ஊத்தங்கரை (தனி), ஓமலூர், உதகமண்டலம், கோவை (தெற்கு), காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, நாங்குநேரி, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய 25 தொகுதிகளில் போட்டியிட்டது,

இந்த முறையும் அதே 25 தொகுதிகளை உள்ளடக்கி 28 தொகுதிகளை திமுக தலைமை வழங்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால், திமுக தலைமையோ, கடந்த முறை வழங்கிய தொகுதிகளை அப்படியே வழங்க முடியாது, குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்ற தொகுதிகளைக்கூட திமுக எடுத்துக்கொண்டு வேறு தொகுதி வழங்குவோம் என்று கூறி இருப்பதாக தெரிகிறது,

எடுத்துக்காட்டாக, கடந்த முறை தென்சென்னையில் உள்ள வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறை அந்த தொகுதியில் நாங்கள் வேட்பாளரை களம் இறக்க உள்ளோம் என்று திமுக தலைமை கூறிவிட்டதாம். அதற்கு பதிலாக, வடசென்னையில் ஒரு தொகுதியை தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதாம்.

இப்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படும் என்ற நிலையில், வேட்பாளர் தேர்விலும் காங்கிரஸ் கட்சி அதிரடி காட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது,

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் களம் கண்டு வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏ.க்களின் 5 ஆண்டு கால செயல்பாடு எப்படி? என்பதை ஆராய்ந்தே காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கலாமா?, வேண்டாமா? என்று முடிவு செய்ய இருக்கிறதாம்.

பிரின்ஸ், பழனி நாடார் போன்றோருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிதாக பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் களைகட்ட தொடங்கி இருக்கிறது,. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சி பிரமுகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *