தெரு நாய்….(சிறுகதை)

 தெரு நாய்….(சிறுகதை)

அந்த ஊரில் இருநூறு குடும்பங்கள் இருந்தன. அரசு பணியில் இருந்த பத்து குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் மாடி வீடு கட்டி குடியிருந்தார்கள்.
வீட்டுமுன் கார்,மோட்டார் சைக்கிள்கள் நின்றன. வீட்டில் பெரிய அளவு டி.வி. இருந்தது. எப்போதும் டி.வி.யில் படம் அல்லது பாட்டு காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்த வீடுகள் செல்வ செழிப்பில் இருப்பது பளிச்சென்று தெரிந்தன. மீதி உள்ள வீடுகளில் நடுத்தரவர்க்கத்தினர் வசித்து வந்தனர். அன்றாடம் விவசாய வேலைக்கு சென்று வந்தார்கள். ஏழ்மை அவர்களின் வீட்டு வாசலில் குடியிருந்தது.
அங்கு சோறு பொங்குவதற்கு பானையும் பொங்கியதை சாப்பிட பாத்திரங்களும் இருந்தன. அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் இரண்டு டப்பாக்களில் இருக்கும். வீடுகளில் பிள்ளை செல்வம் அதிகம். உழைத்து களைத்து வந்தால் வீட்டின் முன் பத்து மணிக்கு படுத்தால் ஆறு மணிக்குதான் எழுவார்கள்.
அவர்களை சுற்றி ஐந்து தெரு நாய்கள் ஓடிவரும். அவர்கள் சாப்பிட்டுவிட்டு மீதி உள்ள சாப்பாட்டை அந்த நாய்களுக்கு வைப்பார்கள். சுவைத்து சாப்பிட்டுவிட்டு தெருவிலே படுத்து தூங்கும் .இரவில் வெளி ஆட்கள் யார் வந்தாலும் விடாது. துரத்தி துரத்தி விரட்டும். வீதியில் படுத்து இருப்பவர்கள் எழுந்து சமாதானப்படுத்தினால் தான் அமைதியாகும்
கடந்த ஒருவாரமாக இரவில் தெரு நாய்கள் சத்தம் அதிகமாக இருந்தது. ஊளையிட்டுக்கொண்டே ஓடின. விடிய விடிய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. வீதியில் படுத்து கிடந்தவர்கள் யாரும் வருகிறார்களா என்று டார்ச் லைட்டு அடித்து பார்த்தார்கள். முள் புதருக்குள் யாரும் தெரியவில்லை.
நாயின் ஊளை சத்தம் மாடி வீட்டில் படுத்து தூங்கியவர்களின் தூக்கத்தை கெடுத்தது.
என்ன நாய்கள் இது..இப்படி ஊளையிடுகிறது..யார்வளர்க்கிறா இதை.சரியா சாப்பாடு போடலையா ..காலையிலே பாத்துக்குவம் என்று நினைத்தனர். காலையில் அந்த குடியிருப்போர் நலசங்க தலைவருக்கு புகார் சென்றது. குடிசைவாசிகள் தான் அந்த தெரு நாய்களை வளர்ப்பதாகவும் அதுக்கு சரியாக சோறு போடாததால் அவை ஊளையிடுங்கின்றன என்று புகாரில் சொல்லப்பட்டிருந்தது.
குடிசைவாசிகளை கூப்பிட்டு குடியிருப்போர் நலசங்க தலைவர் விசாரித்தார். அதற்கு அவர்கள் தெருநாய்களுக்கு நல்லாதான் சோறு போடுறோம். ஒருவாரமாத்தான் அவைகள் ஊளையிடுகின்றன .அது ஏன் என்று தெரியல என்றார்கள்.
மாடி வீட்டுக்காரர்கள் தரப்பில் தெரு நாய்கள் ஊளையிடுவதால் இரவு தூங்க முடியவில்லை .எனவே அவைகளை காட்டுக்குள் விரட்டிவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. குடிசைவாகிகளிடம் கேட்டபோது தெரு நாய்கள் இருப்பது ஒரு பாதுகாப்புதான். திருடன்.. கிருடன் வரமாட்டான் என்று சொன்னார்கள் .
மாடிவீட்டுக்காரர்கள் அதற்கு எங்கள் வீட்டில் உயர்ரக நாய்கள் நிற்கின்றன. இரவு யாரும் உள்ளே வரமுடியாது என்று வாதிட்டனர். குடிசைவாசிகள் இந்த தெரு நாய்கள் குரைப்பதால் எங்களுக்கு ஒண்ணும் தூக்கம் கெடல. நாங்க வேலைக்கு போயிட்டு அலுத்து வருவதால் இரவு படுத்தவுடன் தூங்கிவிடுகிறோம். காலையிலேதான் முழிக்கிறோம் என்றனர்.
மாடிவீட்டுக்காரர்கள் கோபம் அடைந்தனர். தெரு நாய்களுக்கு எந்த பராமரிப்பும் கிடையாது. அதுக கடிச்சிச்சின்னா பயங்கர விஷம். அந்த நாய்கள் நோயை பரப்பி விட்டுவிடும். எனவே அவைகளை விரட்டிவிடுவதுதான் சரி என்றார்கள். குடிசைவாசிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மாடி வீட்டுக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
என்னங்க நாங்க வீட்டில வளர்க்கிற நாயை நல்லா பராமரிக்கோம். கால்நடை டாக்டரிடம் காட்டி ஊசி போடுபோறோம். அதை குளிப்பாட்டி பளபளப்பா வச்சிருக்கோம். வீட்டுக்கு அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கு.. இதுக்கு காஸ்டியான பிஸ்கட் கொடுப்போம். இரவு இது குரைக்கிறதே இல்லை. இந்த தெரு நாய்கள் அப்படியா..அது என்னைக்காவது குளிச்சிருக்கா. அதுக்கு ஊசி போட்டிருக்கியளா. அது கண்ட கழுதையும் தின்னுட்டு வெறிபிடிச்சு சுத்தும்.
அவைகளை ஊரைவிட்டே விரட்டுவதுதான் சரியான வழி என்று சொன்னார்கள். குடிசைவாசிகளுக்கு தெரு நாய்களை விரட்ட மனம் இல்லை.அவைகளுக்கு ஆதரவாக வாதிட்டு பார்த்தார்கள்.அது எடுபடவில்லை.
மாடிவீட்டுக்காரர்கள்…ஒருமனதாக தெரு நாய்களை விரட்டுவது என்று முடிவு செய்தனர். அடுத்த நிமிடம் மாநகராட்சி கமிஷனருக்கு போன் பறந்தது. நடப்பதை அறியாமல் குடிசைவாசிகளை தெரு நாய்கள் சுற்றி வந்தன.
சிறிது நேரத்தில் நாய்பிடிக்கும் வேனில் பத்து பேர் அங்கு வந்து இறங்கினார்கள். எங்க..தெரு நாய்கள்…என்று கேட்டவாறு கம்பி வளையங்கள் வைத்து அவைகளை பிடிக்க விரட்டினார்கள். அவைகள் குடிசைகளை சுற்றி சுற்றி ஓடின. அவர்கள் ஐந்து தெரு நாய்களையும் சுற்றி வளைத்து பிடித்து வேனில் ஏற்றினார்கள்.அவைகள் கண்ணீரோடு குடிசை வாசிகளை பரிதாபமாக பார்த்தன. அவர்கள் கண்களிலும் கண்ணீர் துளிகள் திரண்டன. அடுத்த நிமிடம் அந்த வேன் அங்கிருந்து சென்றது.\
மாடிவீட்டுக்காரர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.போன் பண்ணின பத்தாவது நிமிடத்தில் மாநகராட்சியிலிருந்து தெரு நாய்களை பிடித்து சென்றதால் அவர்கள் தங்கள் செல்வாக்கை மற்றவர்களிடம் சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள்.குடிசை வாசிகள் அதை கண்டு கொள்ளாமல் விவசாய வேலைக்கு புறப்பட்டு சென்றார்கள்.
இரவு வீட்டுக்கு திரும்பிய குடிசைவாசிகளுக்கு அவர்கள் காலை சுற்றி ஓடிவரும் தெரு நாய்கள் இல்லாததால் அவர்கள் மனம் கொஞ்சம் வலித்தது.சாப்பிட உட்கார்ந்த அவர்களுக்கு அந்த நாய்களே நினைவுக்கு வந்து சென்றது.பாதி சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வீதியில் பாயை விரித்தார்கள். தூக்கம் வரவில்லை. புரண்டு கொண்டே இருந்தனர். இரண்டு மணிக்கு மேல் அலுப்பில் தூங்கிவிட்டார்கள்.
மாடி வீட்டில் உள்ளவர்கள் தெரு நாய் ஊளையிடும் சத்தம் இல்லாததால் நிம்மதியாக குறட்டைவிட்டு தூங்கினார்கள்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அந்த ஊரே பரப்பரப்பில் இருந்தது.. போலீஸ் ஜீப்கள் விரைந்து வந்தது…
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த மாடிவீட்டை நோக்கி நடந்து சென்றார்கள். அந்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் மயங்கி கிடந்தது. அதன் அருகில் மயக்க பிஸ்கட்டுகள் கிடந்தன.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ஐம்பது பவுன் நகை இரண்டு லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். கைரேகை நிபுணர்கள் அந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
அந்த வீட்டுக்காரரிடம் சப் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். இரவு நல்லா தூங்கிட்டோம் சார். காலையிலே முழிச்சு பார்த்தப்பதான் பின்பக்க கதவும் பீரோவும் உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறது தெரிஞ்சுது…உடனே கொள்ளையர்களை பிடிச்சிடுங்க சார் என்று கெஞ்சினார்.
ஊருக்கு காவலாளி இல்லையா என்று சப் இன்ஸ்பெக்டர் கேட்டார். அதற்கு அவர் இல்லை சார்.வீட்டிலே பாதுகாப்புக்கு உயர்ரக நாய் வளர்த்தேன்.அது பிஸ்கட்டுக்கு ஆசைபட்டுபோய் கொள்ளைக்காரன் போட்ட மயக்க பிஸ்கட்டை தின்னுட்டு மயங்கி கிடக்கிறதை பாருங்க என்று அதை திட்டினார்.
போலீசார் அந்த வீட்டில் கொள்ளையடித்தது எந்த கும்பலாக இருக்கும் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நேரத்தில் ரெயிலில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்கள்…தங்களுக்குள்.. ஒருவாரமா முயற்சி பண்ணுனம். இந்த தெரு நாய்கள் நம்மள இரவு ஊருக்குள் விடாம குரைச்சிக்கிட்டே கிடந்துச்சு.. பிஸ்கட் போட்டாலும் திங்க மாட்டேன்னுட்டுது. இன்னைக்கு ஒரு தெரு நாயையும் காணம..எங்கே போச்சுதோ…என்று பேசியபடி கடைசி பெட்டியில் நின்றபடி பயணம் செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த பையில் மாடிவீட்டில் கொள்ளையடித்த பணமும் நகையும் கனத்தது.
வே.தபசுக்குமார்,தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *