அச்சிட்ட செய்தித்தாள்களில் வடை, பஜ்ஜி வழங்கினால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
![அச்சிட்ட செய்தித்தாள்களில் வடை, பஜ்ஜி வழங்கினால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை](https://tn96news.com/wp-content/uploads/2022/07/download-12.jpg)
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்குவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று (18.7.22) வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது வணிகர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் வடைக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட செய்தித்தாள் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. வணிகர்களின் இம்மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்கள் பொதுமக்களின் பொது சுகாதார நலத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும்.
அதாவது அச்சிட்ட செய்தித்தாளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அப்பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே பொதுமக்களின் பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
செய்தித்தாள் மற்றும் காகிதங்களுக்கு மாற்றாக வாழை இலை, பனையோலை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
பாலிதீன் தயாரிக்கப்படும் நிறுவனங்களில் அரசு விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு உணவகங்களில் உள்ளவர்கள் டைபாய்டு ஊசி போட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
செய்தித்தாள் மற்றும் காகிதங்களில் உணவுகளை பொட்டலம் செய்பவர்களை குறித்து மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி 9444042344, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி 8680800944 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வே.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், கலேக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் உடனிருந்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)