தங்க புதையல்….(சிறுகதை)

 தங்க புதையல்….(சிறுகதை)

கபாலிக்கு அந்த தகவல் வந்ததும் ஆசை ஆட்டிப்படைத்தது.
புதையல்…தங்க புதையல் அவர் மனம் அதையே நினைத்தது. காட்டுபகுதியில் உள்ள ஒற்றை ஆலமரம்…அதன் அருகில் நான்கடி ஆழத்தில் தங்க புதையல் உள்ளது என்றும் பவுர்ணமி பூஜை செய்து நரபலி கொடுத்து அந்த புதையலை எடுக்கவேண்டும் என்று மந்திரவாதி சொன்னபோது கபாலிக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது.
ஆனால் மந்திரவாதி காட்டிய ஆசை கபாலியை அந்த திசையை நோக்கி நகர்த்தியது. என்னைக்கு பெரிய கோடிஸ்வரனாவது.. .புதையல் கிடைச்சா…வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்…ஆனா இந்த நரபலி கொடுக்கிற சமாச்சாரம் தான் அவனுக்கு உதைத்தது.
மந்திரவாதி யிடம் கேட்டான்… மந்திரவாதி ….மனிதனை தான் பலி கொடுக்கணுமா…இந்த ஆட்டை பலி கொடுத்தா…சரியா இருக்காதா என்று கேட்டான். மந்திரவாதி …கோபமாக பார்த்தார்.
கபாலி… தங்க புதையலை பூதம் பாதுகாக்கு…நரபலி கொடுத்தாதான் பூதம். அதை ஏற்றுக்கொண்டு தங்க புதையலை எடுக்கவிடும். இல்லன்னா புதையல் எடுக்கபோற ஆளை அடிச்சு கொன்னுடும்..ஜாக்கிரதை என்று மிரட்டினார். கபாலிக்கு ஒன்றும் ஓடவில்லை.சரி.. .நீங்க சொல்கிறபடி செய்கிறேன்…என்றான்.
மந்திரவாதி முகம் மலர்ந்தது. கபாலி…உனக்கு அந்த தங்க புதையல் கிடைக்கணுமுன்னுதான் நான் ஆசைப்படுறன். நரபலிக்கு ஆளை ரெடி பண்ணு. பூஜைக்கு நான் ரெடிபண்ணுறன்…தங்க புதையலில் உனக்கு பாதி எனக்கு பாதி…அப்படியே வெளிமாநிலத்திலே போய் செட்டிலாயிடுவோம்..என்றார்.
கபாலி யோசனையில் ஆழ்ந்தான். என்ன யோசனை..கபாலி சொல் என்றார் மந்திரவாதி. கபாலி நரபலிக்கு ஆள்எப்படி பிடிப்பது என்றுதான் யோசிக்கிறேன் என்றான். அதை கேட்டு மந்திரவாதி சிரித்தார்.
கபாலி..ஏழுவயதில் இருந்து பத்து வயதுக்குள்ள சிறுவன் கிடைக்கமாட்டானா… பிச்சை எடுக்கவருகிற சிறுவன் சிக்கமாட்டானா…என்று சொன்னார்.
கபாலி மனக்கண்ணில் சில காட்சிகள் விரிந்தன. நரபலிக்கு சிறுவன் …எங்கு போய் பிடிக்கலாம் என்று நினைத்தான். பிச்சைக்கார சிறுவர்கள் பஸ்நிலையம் ரெயில் நிலையம் கோவில் போன்ற பகுதிகளில் இருப்பார்கள்…நம்ம கூட்டாளிகளிடம் சொல்லி ஒரு சிறுவனை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கிவந்துவிடவேண்டியதுதான்…அப்புறம்..நரபலிதான்..தங்க புதையல்தான்..குடும்பத்தோடு வெளிமாநிலத்துக்கு போய் செட்டிலாகிடவேண்டியதுதான்…
அதை நினைக்கும் போதே அவனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மந்திரவாதியிடம்…சரி …நீங்க சொல்லுறபடி செய்கிறேன். புதையல் கிடைக்கவழிசெய்ய வேண்டியது உங்க பொறுப்பு…என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
கபாலி வேகமாக நடந்தான். வீட்டை நெருங்க நெருங்க…அவனது கனவு திட்டமே. ..மனதில் வந்து போனது. அது மட்டும் நிறைவேறிட்டா அப்புறம் நம்மள யாரும் அசைக்கமுடியாது என்று தனக்குதானே நினைத்துக்கொண்டான். வீட்டுக்குள் சென்றதும் அவன் மனைவி…என்னங்க இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீய…என்று கேட்டாள்.
நான்…என் கூட்டாளிகளை பாக்க போயிருந்தேன்…என்றான். உடனே அவன் மனைவி…கோபமாக சும்மா ஊரை சுத்திவந்தா எப்படி காசுவரும்…ஏதாவது வேலை செஞ்சாதான காசுவரும் என்றாள்.
கபாலி பதிலுக்கு ஏய் சும்மா கத்தாத…பவுர்ணமி முடியட்டும் அப்புறம் பாரு…நம்மோட லெவலே மாறிடும் என்றான். அவன் மனைவி வேதனையுடன் இதையேத்தான் சொல்லிக்கிட்டு இருக்கிய…ஒண்ணும் நடந்த பாடில்ல என்றாள்.
கபாலி அவளை சமாதானப்படுத்தினான்.சரி…கோபப்படாதே..பையனை எங்கே இன்னும் காணம்…என்று கேட்டான்.அவள் கோபத்தில்…உங்க பையனும் உங்கள மாதிரிதான் இருக்கான். பள்ளிக்கூடம்விட்டா…நேரா வீட்டுக்குவாரானா…நண்பர்களோடு சுத்திட்டு ராத்திரிக்குதான் வர்ரான்.அவனை யார் கண்டிக்கிறது என்று தன் இயலாமையை கூறினாள்.
கபாலி அவளிடம்…சின்ன பிள்ளைகள் அப்படித்தான் இருக்கும்.அது போக்குக்குக்குதான் விட்டுப்பிடிக்கணும் என்றான்.அவள் ஆத்திரத்தில் இப்படியேவிட்டா அவனும் உங்கள மாதிரி ரவுடி ஆகிடுவான். சின்னதிலே அவனை திருத்தணும் என்றாள். கபாலி பதில் சொல்லாமல் இருந்தான்.கட்டபஞ்சாயத்து பேசியதில் கிடைத்த இருநூறு ரூபாயை மனைவி கையில் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேவந்தான்.
.நரபலிக்கு ஆள்பிடிப்பது என்ற நிலை அவனுக்கு நெருடலாக இருந்தது. ஆனால் புதையல் ஆசை கண்ணை மறைத்தது. அப்படியே பஸ்நிலையம் ரெயில் நிலையம் பள்ளிக்கூடம் கோவில் ஆகிய பகுதிகளை சுத்திவந்தான். கண்ணுக்கு எந்த பிச்சைகார சிறுவனும் தென்படவில்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்டான். எல்லாரும் வெளியூரில் திருவிழாவுக்கு போயிருக்காங்க…பவுர்ணமி அன்னைக்கு எல்லாரும் வந்துடுவாங்க…என்றனர்.
அன்னைக்கு காலையிலே வந்துடுவாங்களா…என்று கபாலி கேட்டான். அதற்கு அவர்கள்…அதை ஏன் கேட்கிறீங்க…என்று மடக்கினர். அதற்கு கபாலி….அது வந்து பவுர்ணமி அன்னைக்கு அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும். அதான் கேட்கிறன் என்று சொன்னான். அவர்களும் அப்படியா என்றனர்.
கபாலி உடனே… பவுர்ணமிக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. பவுர்ணமிக்கு முன்பே சிறுவனை பிடிச்சிட்டு வந்துட்டா…எங்கே அடைச்சி வைக்கிறது…விஷயம் லீக்கவுட் ஆனா பிரச்சினை பெரிதாகிவிடும்…பவுர்ணமி அன்னைக்கு சிறுவன் சிக்கினால் அப்படியே பவுர்ணமி பூஜைக்கு கொண்டு போயிடலாம்…என்று நினைத்தான்
கபாலி பவுர்ணமி பூஜை கனவோடு அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு போனான். இரவு ஒன்பது மணிக்கு அவனது மகன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தான். என்னடா…பள்ளிக்கூடம் விட்டா வீட்டுக்கு வரமாட்டியா…எங்கே சுத்திட்டு வர்ரே…இனி பள்ளிக்கூடம் விட்டா ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடணும் சரியா என்று கண்டித்தார்.
அவன் கபாலி சொன்னதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. நேராக பாட புத்தகபையை வீட்டு மேசையில் வைத்துவிட்டு..அம்மா சாப்பாடு என்றான். கை காலை கழுவிட்டுவா…சாப்பாடு போடுறன் என்றாள் அவள். அவன் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே வந்தான். கபாலி மனைவி தட்டில் சாப்பாடு போட்டு அவனுக்கு பிசைந்து ஊட்டினாள்.
கபாலி சிரித்தபடி..ஏடி..அவனுக்கு பத்து வயது ஆகுது…இன்னும் அவன் சின்னபையனா…அவனுக்கு சோறு ஊட்டுற என்று செல்லமாக கண்டித்தான்.அவள் உடனே..நமக்கு ஒரே பையன்…அவனுக்கு செல்லம் கொடுக்காம…யாருக்கு செல்லம் கொடுக்கிறது..என்றாள்.கபாலி…ஒன்றும் சொல்லாமல் வீட்டின் உள்ளறையில் படுக்க சென்றான். ஏங்க சாப்பிடலைய்யா.. என்று அவனது மனைவி கேட்டாள். கபாலி உடனே…எனக்கு இப்போ பசிக்கல…சாப்பாடு வேண்டாம் என்றவன் போர்வையால் மூடிபடுத்துக்கொண்டான்.
விடிந்தது. பவுர்ணமி பூஜை நினைவே வந்தது. நேரே காட்டில் உள்ள மந்திரவாதியை போய்பார்த்தான். புன்னகையுடன் திரும்பினான். இவ்வாறாக நான்கு முறை
போய் சந்தித்தான். நாட்கள் உருண்டோடின..
அன்று பவுர்ணமி…கபாலி பதட்டமாக காணப்பட்டான்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு …கபாலி மகன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். ஏய்…லீவு நாளுன்னு வெளியே எங்கும் போகாதே…வெயில் பயங்கரமா அடிக்கு வீட்டிலே இருந்து விளையாடு என்று சொல்லிவிட்டு கபாலி வீட்டிலிருந்து புறப்பட்டான்.பவுர்ணமி பூஜைக்கு சிறுவன் எங்கே பிடிப்பது…ரெயில் நிலையம் நோக்கி நடந்தான்.அதன் அருகில் பிச்சைக்கார சிறுவன் ஒருவன்…அய்யா பசிக்குது காசு கொடுங்கய்யா என்று கையை நீட்டினான்.
கபாலிக்கு மனசு சில்லென்றிருந்தது.என்ன தம்பி உன் பெயரென்ன..உனக்கு அப்பா அம்மா இருக்காங்களா…என்று கேட்டான்.அதற்கு அந்த சிறுவன்..எனக்கு அப்பா அம்மா கிடையாது.நான் அனாதை.என்றான்.கபாலி உடனே…அந்த சிறுவனைபார்த்து நைட்டு இங்கேதான் இருப்பியா என்று கேட்டார். அதற்கு அவன் ..இங்கேதான் யாரும் குடுக்கிறதை சாப்பிட்டுவிட்டு விளையாடிட்டு இருப்பேன் என்றான்.கண்ணாயிரம் அதை கேட்டு அப்படியா…நைட்டு இன்னைக்கு என்னுடைய நண்பன் பிறந்த நாள் இங்கேவந்து உனக்கும் மற்றவர்களுக்கும் பிரியாணி தருவார்கள் என்றான்.
சிறுவன் …இப்போ பசிக்குது ஏதாவது கொடுங்க என்று சொன்னான். கபாலி தன்சட்டை பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து கொடுத்தான். சிறுவன் சிரித்து கொண்டே வாங்கினான்.நைட்டு பிரியாணி எப்போ வரும் என்று கேட்டான்.இரவு ஒன்பது மணிக்கு காரில் வந்து பிரியாணி தருவாங்க என்று சொல்லிவிட்டு அந்த சிறுவனை கூர்ந்து பார்த்தான்.
பின்னர் அங்கிருந்து வேகமாக நடந்தான்.காட்டுபகுதியில் மறைந்திருந்த தன் நண்பர்களிடம்…விசயத்தை சொன்னான். அவர்களும் சரி என்றார்கள்.
இரவு ஒன்பது மணி..காட்டில் உள்ள ஆலமரத்தின் அடியில் மந்திரவாதி பவுர்ணமி பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தார். கபாலி …அவர் அருகில் சென்றான்.என்னாச்சு…சிறுவன் ரெடியா என்று கபாலியிடம் மந்திரவாதி கேட்டார்.
கபாலி அவரிடம் எல்லாம் ரெடி பண்ணியாச்சு…சிறுவனை காரில கொண்டு வந்திடுவாங்க என்றான். நேரம் கடந்தது. கார்வரும் சத்தம் கேட்டது.கபாலி உற்சாகமானான். கார் வந்த திசையை நோக்கி சென்றான். காரின் முகப்புவிளக்கு வெளிச்சம் கண்களை கூச செய்தது. கபாலியை பார்த்ததும் கார் நின்றது. காரில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள்.
அவர்களிடம் சிறுவன் எங்கே என்று கபாலி கேட்டான்.டிக்கியில் சாக்குமூட்டையில் பத்திரமாக இருக்கிறான் என்றார்கள். கபாலி வேகமாக சென்று டிக்கியை திறந்து சாக்கு மூட்டையை பார்த்தான்.ஒருவன் சாக்கு மூட்டையை கீழே இறக்கிவைத்தான்.
அப்பம்..நாங்க வர்ரோம்…நாளைக்கு மீட் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டு காரில் சென்றார்கள்.பவுர்ணமி ஒளியில் சாக்கு மூட்டையை கபாலி அவிழ்த்தான்.உள்ளே இருந்த சிறுவன் கைகால் கட்டப்பட்ட நிலையில் இருந்தான்.கபாலியை பார்த்ததும்..அப்பா…என்று கத்தினான். கபாலிக்கு தூக்கிவாரிப்போட்டது. இவன் எப்படி இங்கே வந்தான்..கண்களில் கண்ணீர்வடிய இருந்த மகனைபார்த்து திடுக்கிட்டான்.
அவனுக்கு நெஞ்சில் ஏதோ அடைப்பது போலிருந்தது. சாக்கு மூட்டையிலிருந்த சிறுவனின் கை கால்களை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான்.அப்படியே தன் மகனை வாரி அணைத்து முத்தமிட்டான்.அவன் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
சிறுவன் அழுது கொண்டே அப்பா நான் நைட்டு விளையாடிட்டு ரெயில் நிலையம் அருகே நடந்து வந்தேன். திடீரென்று பாய்ந்து சாக்கு மூட்டையில் கட்டி காரில் கொண்டு வந்துட்டாங்க என்றான்.
கபாலி அவனை வாரி அணைத்து முத்தமிட்டான்.வா…இங்கே நிக்கக் கூடாது. ஓடிடுவோம் என்று தன் மகனின் கையை பிடித்துக்கொண்டு காட்டு பகுதியில் ஓடினான் .கண்ணில் காணாத புதையலை நினைத்து கையிலிருக்கிற தங்க புதையலை பறிகொடுக்க பார்த்தேனே என்று மனசுக்குள் அழுதான்.
தனது கூட்டாளிகள் ஆள்மாத்தி தன்மகனை கொண்டு வந்ததை உணர்ந்தபோது பகீர் என்றது. வீட்டை நோக்கி மகனுடன் வேகமாக நடந்தான்.இந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று திருந்திவாழ வேண்டும் என்று அவன் மனம் சொன்னது.
காட்டில் … நரபலிக்கு சிறுவன் வராததால் கோபத்தை அடக்கமுடியாமல் குதித்துக்கொண்டிருந்தார் மந்திரவாதி !
-வே.தபசுகுமார், தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *