சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத்தை விட தமிழகம் முன்னேறுகிறது; கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளராக த. வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் த. வெ. க. பரப்பரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சாமானியர்கள், எங்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை. ஜாதி,மத பணம் பின்புலம் இல்லை, எந்த மூலதனம் இல்லாமல் மக்களையே மூலதனமாக கொண்டு தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி ஆட்சிக்கு வந்தார் எங்கள் தலைவர் முதல்வர் ஜோசப் விஜய்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு த. வெ. க. பெயரை சொல்வதற்கு அன்று நடுக்கம் இருந்தது. எங்கள் தலைவர் பெயரை சொல்வதற்கு அவர்களுக்கு தயக்கம் இருந்தது.
ஆனால் இன்றைக்கு எங்கள் தலைவர் பெயரை சொல்லாமல் ஒரு நாளை நகர்த்த முடியாமல் இருக்கிறார்கள். எங்கள் தலைவர் முதல்வர் விஜய் இன்றைக்கு அரசியலை ஆக்கிரமித்துள்ளார்.
த. வெ. க. ஆட்சிக்கு வந்ததும் இன்றைக்கு பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடி அடிப்படை. மு க ஸ்டாலின் முதல்வராக இருந்து போது நித்தம் நித்தம் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். பெண்கள் இன்றைக்கு பாதுகாப்பான நிர்வாகத்தின் கீழ் இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
காவிரி பிரச்சனை, மேகதாது பிரச்சினையில் தமிழக முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருத்தங்களை சொன்ன போது, முதல்வர் விஜய் எவ்வித காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அந்த திருத்தத்தை தீர்மானத்தில் சேர்த்துக் கொண்டார். முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை மலையை விட பெரியது.
திமுகவிற்கு பாஜகவுடன் கள்ளக்காதல் இருக்கிறது என்பதை முதலில் அறிவித்தவர் எங்கள் தலைவர் விஜய். இன்றைக்கு திமுக ஒன்றிய அரசு எதிர்த்து ஏன் போராடவில்லை.தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து தமிழக வெற்றி கழகம் போராடுகிறது, சட்டமன்றத்தில் அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறது. திமுக என்ன செய்யப் போகிறது
இந்தியாவில் அமித்ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான். தமிழக அரசியலில் அலட்சிய படுத்த முடியாத அரண் விஜய்.
தமிழகத்தை பாஜக எப்படி காவிமயமாக்க முயற்சித்ததோ, அதேபோன்று திமுக கருணாநிதி மயமாக்க முயற்சித்தது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றி கழக ஆட்சியில் திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்கள் வைக்கப்படுகிறது.

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் மோடியின் குஜராத்தை விட தமிழகம் இன்றைக்கு முன்னேறுகிறது.
முதல்வர் விஜய் பேசுவதில்லை என்று அதை ஒரு குறையாக கூறுகின்றனர். மலையின் மவுனத்தைவிட எங்கள் தலைவர் விஜய்யின் மவுனம் கடினமானது. தேவைப்பட்டால் பேசுவார் தேவை வரும்போது பேசுவார், ஒரு நாள் பேசியதற்கு நீங்கள் ஒன்பது நாட்கள் தூங்கவில்லை, மீண்டும் பேச ஆரம்பித்தால் உங்கள் நிலைமை என்னவாகும்.
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை இளைஞர்கள் பொதுமக்கள் கொண்டாடுகின்றனர். என்னுடைய 7 வயது பேரன் விசிலுக்கு ஓட்டு போடணும்.தேர்தல் என்றைக்கு வரும் என்று கேட்கிறான்
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.







