பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதன்மை பெற்ற 15 அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு விருது
Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதன்மை பெற்ற மாணவ மாணவியருக்கு விருது மற்றும் பரிசளிப்பு விழா விளாத்திகுளம் டி. என். டி. டி. எ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையும், விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 15 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும், பரிசும் வழங்கப்பட்டது.
விழாவிற்கு சமூக ஆர்வலர் இளையராஜா (எ) மாரியப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் கிறிஸ்து ஞான வள்ளுவன், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத்தலைவர் ஆனந்தராஜ், முருகசரஸ்வதி ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

மூத்த தமிழறிஞரும், கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனருமான திருமலை முத்துச்சாமி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். பாரதி இலக்கிய மன்ற நிறுவனர் முத்துப்பாண்டி விழாவைத் தொகுத்து வழங்கினார். பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.







