தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலைச் செந்தூர் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குப் படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கீதன், ராமர், தலைமைக்காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் செந்தூர் நகர் கடற்கரைச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று (22.07.2026) அதிகாலை 4: மணியளவில் அப்பகுதியில் சோதனையிட்ட போது, லோடு வேனில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட தலா 35 கிலோ எடை கொண்ட 79 மூட்டை பீடி இலைகள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. பீடி இலைகளின் சர்வதேசச் சந்தை மதிப்புச் சுமார் ரூ.1 கோடி ஆகும்.

இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குரும்பூர் பழைய தெருவைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரை போலீசார்மடக்கிப் பிடித்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லோடு வேன், கைது செய்யப்பட்ட சூர்யா ஆகியோர் மேல் நடவடிக்கைக்காகச் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.







