`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்; கோவில்பட்டியில் அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடக்கிறது
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் அவருக்கு வயது 79..
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம் ஆகும். பூமணி, இளையரசனேந்தலில் தனது பள்ளிப்படிப்பையும், விருதுநகரில் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.

எழுத்தாளர் பூமணி, சென்னையில் காலமானார். அவரது உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.
கரிசல் மண் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக பதிவு செய்தவர். இவரது பெரும்பாலான படைப்புகள் கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை
வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் அஞ்ஞாடி உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றன. அஞ்ஞாடி நாவலுக்காக 2014-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
பூமணி எழுதிய புகழ்பெற்ற ‘வெக்கை’ நாவலைத் தழுவி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பூமணி மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது;-
“சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. திரு. பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில். பூமணி பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்”
இவ்வாறு அவர் கூறி உள்ளார்/







