கோவில்பட்டியில் புதுப்பொலிவுடன் காமராஜர் வெண்கல சிலை 15ம் தேதி திறப்பு

கோவில்பட்டி மெயின் ரோட்டில் அடைக்கலம் காத்தான் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் மேல் பகுதியில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை நிறுவப்பட்டு இருந்தது.
ஒரு சிறுவன், சிறுமியை கை கரம் பிடித்து அழைத்து செல்வது போல் காமராஜர் சிலை உருவாக்கப்பட்டு 23-11-1991 அன்று கவர்னராக இருந்த பீஷ்ம நாராயண் சிங், இந்த சிலையை திறந்து வைத்தார்.

கோவில்பட்டியின் அடையாளமாக விளங்கிய காமராஜர் சிலைக்கு தற்போது நாடார் உறவின் முறையின் துணை தலைவராக இருக்கும் செல்வராஜ் தனது சொந்த செலவில் தினமும் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.
சிலை நிறுவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காமராஜர் சிலையானது, புதுப்பொலிவுடன் முழு உருவ வெண்கல சிலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலை நிறுவப்பட இருக்கும் மண்டபத்தின் மேல் பகுதி மற்றும் படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
தற்போது காமராஜர் வெண்கல சிலை அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மேல் பகுதியில் நிறுவப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாளான வருகிற 15ஆம் தேதி காமராஜர் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் நடிகர் லெஜண்ட் சரவணன், பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர் எஸ் ரமேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.







